ஹசாரிபாக்: ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் இன்று (செப்.5) காலை பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் தலைவர் சஹ்தேவ் சோரன் உட்பட மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கோர்ஹார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்டித்ரி வனப் பகுதியில் காலை 6 மணியளவில் மாவோயிஸ்ட் அமைப்பின் சஹ்தேவ் சோரனின் படையினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்த நடவடிக்கையின் போது ரூ.1 கோடி வெகுமானம் அறிவிக்கப்பட்டிருந்த சஹ்தேவ் சோரன் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினராக உள்ளார். மேலும், இவர் கிழக்கு இந்தியாவில் மிகவும் தேடப்படும் மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவருமாவார்.
மேலும், ரூ.25 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த பிஹார் – ஜார்க்கண்ட் சிறப்புப் பகுதிக் குழு உறுப்பினரான ரகுநாத் ஹெம்பிராம் என்ற சன்சல் மற்றும் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த மண்டலக் குழு உறுப்பினரான பிர்சென் கஞ்சு என்ற ராம்கெலவன் ஆகியோரும் இந்த என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
என்கவுன்ட்டருக்குப் பிறகு கொல்லப்பட்ட அனைத்து மாவோயிஸ்டுகளின் உடல்களையும் பாதுகாப்புப் படையினர் மீட்டனர். இதற்கிடையில், வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை இன்னும் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் கோப்ரா பட்டாலியன், கிரிதிஹ் காவல்துறை மற்றும் ஹசாரிபாக் காவல்துறை ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையில் இந்த என்கவுண்டர் நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக ஜார்க்கண்ட் காவல்துறை உறுதிப்படுத்தியது. \
கிரிதிஹ் – பொகாரோ எல்லைக்கு அருகிலுள்ள ததிஜாரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரண்டி கிராமத்தில் காலை 6 மணியளவில் கிளர்ச்சியாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.