ராஞ்சி: ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் இன்று (ஜூலை 16) காலையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு மாவோயிஸ்டுகளும், ஒரு சிஆர்பிஎப் வீரரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பொகாரோ மாவட்டத்தில் கோமியா காவல் நிலையப் பகுதியில் உள்ள பிர்ஹோர்டெரா காட்டில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த என்கவுன்டரின் போது பாதுகாப்புப் படையினர் இரண்டு மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றனர். சிஆர்பிஎப் கோப்ரா பட்டாலியனை சேர்ந்த ஒரு வீரர் இந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்தார் என்று பொகாரோ மண்டலம் ஐஜி கிராந்தி குமார் காடிதேசி தெரிவித்தார்.
இந்த என்கவுன்டரைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக பொகாரோ மாவட்ட எஸ்பி ஹர்விந்தர் சிங் தெரிவித்தார். கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மார்ச் 2026க்குள் நக்சல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படுவார்கள் என்றும், மாவோயிஸ்டுகள் துப்பாக்கிகளை கைவிட்டு சரணடைய வேண்டும் எனவும் அமித் ஷா வேண்டுகோள் விடுத்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் முக்கிய தலைவர்கள் உட்பட பல மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேபோல கடந்த சில வாரங்களில் பல மாவோயிஸ்டுகள் போலீஸாரிடம் சரணடைந்து வருகின்றனர்.