புதுடெல்லி: ஜார்க்கண்டின் சிம்டேகா மாவட்ட காவல் துறையில் சிறப்பாக செயல்படும் ஒருவரை ஒவ்வொரு வாரமும் தேர்வு செய்து அவர்களுக்கு அம்மாவட்ட எஸ்.பி. விருது வழங்கி வருகிறார் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிம்டேகா மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்பி) இருப்பவர் எம்.அர்ஷி.
இவர் இந்த வார சிறந்த காவலர் (police man of the week) எனும் புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதன்படி சிம்டேகா மாவட்ட போலீஸாரில் சிறப்பாக செயல்படும் ஒருவரை ஒவ்வொரு வாரமும் தேர்வுசெய்கிறார். பிறகு அவருக்கு ‘இந்த வார சிறந்த காவலர்’ விருது வழங்கி கவுரவிக்கிறார்.
இந்த விருது, பரிசுப் பொருளுடன் பாராட்டுச் சான்றிதழை கொண்டதாகும். ஒவ்வொரு வாரம் சனிக்கிழமைதோறும் வழங்கப்படும் இவ்விருதை இதுவரை 9 பேர் பெற்றுள்ளனர். மாவட்டத்தின் அவுட்போஸ்ட் முதல் காவல் நிலையங்கள் வரை சாதாரணக் காவலர் முதல் ஆய்வாளர் வரை விருதுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக எஸ்.பி. அர்ஷி தலைமையில் சிறப்புக் குழு செயல்படுகிறது. இக்குழுவில் துணை எஸ்பி, டிஎஸ்பி, காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் இடம் பெற்றுள்ளனர்.
விருது பெற்றவரின் புகைப்படம் ஒரு வாரம் முழுவதும் மாவட்டக் காவல் நிலையங்கள் மற்றும் அவுட்போஸ்ட்கள் அனைத்திலும் காட்சிப்படுத்தப்படுகின்றன. இதனால் விருதை பெறுவதற்காக போலீஸாரிடையே ஆராக்கியமான போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறப்பாக செயல்படும் போலீஸாரை ஊக்குவிக்கும் இந்த தனித்துவமாக முயற்சிக்கு மாநிலம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிற மாவட்டங்களிலும் இதனை அமல்படுத்த சோரன் தலைமையிலான அரசு ஆலோசித்து வருகிறது.