புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார். அவருக்கு வயது 79. சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வந்த மாலிக், சிகிச்சை பலின்றி இன்று உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேசத்தின் பக்பத் நகரத்தைச் சேர்ந்த சத்யபால் மாலிக், ஹரியானாவை பூர்வீகமாகக் கொண்டவர். சோசலிச தலைவரான ராம் மனோகர் லோகியா மீது கொண்ட ஈர்ப்பால் 1960-களின் மத்தியில் அரசியலுக்கு வந்த சத்யபால் மாலிக், 1980-களின் மத்தியில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அக்கட்சி சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாலிக், அதன் பின்னர் 1987-ல் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார்.
ஜன மோர்ச்சா அமைப்பின் நிறுவனர்களில் ஒருவராக விளங்கியவர் சத்யபால் மாலிக். ஜன மோர்ச்சா 1988-ல் ஜனதா தளமாக உருவெடுத்தது. 2004-ல் பாஜகவில் இணைந்த சத்யபால் மாலிக், 2012-ல் கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2014 மக்களவைத் தேர்தலின்போது நரேந்திர மோடியின் குழுவில் இருந்த சத்யபால் மாலிக், 2017-ல் பிஹார் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2018-ல் அவர் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக மாற்றப்பட்டார். சத்யபால் மாலிக் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்தபோதுதான், அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து, 2019, அக்டோபரில் கோவா ஆளுநராக அவர் மாற்றப்பட்டார். 9 மாதங்கள் கோவா ஆளுநராக இருந்த நிலையில், மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அம்மாநில ஆளுநராக இருந்த நிலையில், அக்டோபர் 4, 2022ல் சத்யபால் மாலிக் ஓய்வு பெற்றார்.
சிறுநீரகம் சார்ந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வந்த சத்யபால் மாலிக், டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1.10 மணி அளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.