புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கும் மசோதாவை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் வலியுறுத்தி உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது.
அதன் பின்னர், ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. காஷ்மீரில் அமைதி திரும்பிய பின் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு இவர்கள் கூட்டாக எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக மீண்டும் முழு மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கை சட்டப்பூர்வமானது மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பானது.
கடந்த காலங்களில் யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் சுதந்திர இந்தியாவில் இதற்கு முன் நடந்திராத ஒன்று. முழுமையான மாநிலம் அதன் பிரிவினைக்கு பிறகு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது இதுவே முதல்முறை.
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று நீங்கள் பலமுறை உறுதி அளித்துள்ளீர்கள். உச்ச நீதிமன்றத்திலும் இதே வாக்குறுதியை மத்திய அரசு அளித்துள்ளது. எனவே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதாவை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.
கூடுதலாக, லடாக் யூனியன் பிரதேசத்தை அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கும் மசோதா கொண்டு வரப்பட வேண்டும். லடாக் மக்களின் கலாச்சாரம், வளர்ச்சி மற்றும் அரசியல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் அவர்களின் உரிமைகள், நிலம் மற்றும் அடையாளத்தை பாதுகாக்கவும் இது முக்கிய நடவடிக்கையாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தங்கள் கடிதத்தில் கூறியுள்ளனர்.