ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக ஸ்ரீநகரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சினார் ராணுவப் படை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தீவிரமான துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். நடவடிக்கை தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் யார் என்பது குறித்தும் அவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைத் தேடும் பணியை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தினர். ஸ்ரீநகரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டாச்சிகாம் பகுதியை நோக்கி பயங்கரவாதிகள் நகர்ந்திருக்கலாம் என உளவுத் தகவல்கள் தெரிவித்ததை அடுத்து, அதன் அடிப்படையில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ஹர்வானின் முல்னார் பகுதியில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், இதையடுத்து அங்கு படைகள் குவிக்கப்பட்டு தேடுதல் மேலும் தீவிரப்படுத்தப்பட்டதாகவும் இந்த மோதலில் 3 அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
எனினும், தற்போது கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளுக்கும் ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.