ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 வாரங்களாக மேகவெடிப்பால் பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவது தொடர்கிறது. இந்தப் பேரிடர்களுக்கு ஜம்முவில் இதுவரை 130 பேர் உயிரிழந்தனர், 140 பேர் காயம் அடைந்துள்ளனர். 32 பக்தர்களை காணவில்லை.
ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பக்தர்கள் உயிரிழந்தனர். இக்கோயிலுக்கான யாத்திரை நேற்று 5-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் 24 மணி நேரமும் மழை, வெள்ள நிலவரத்தை கண்காணிக்கவும் ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், ரியாசி மாவட்டத்தின் தொலைதூர பத்தேர் கிராமத்தில் நேற்று அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு சிக்கியது. இதில் அந்த வீட்டில் வசித்த கணவன், மனைவி, 5 குழந்தைகள் என 7 பேரும் உயிரிழந்தனர்.
இதுபோல் ராம்பன் மாவட்டத்தின் தொலைதூர கிராமம் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு மேகவெடிப்பை தொடர்ந்து ஒரு பள்ளியும் 2 வீடுகளும் சேதம் அடைந்தன. இதில் 2 சகோதரர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். கடந்த 26-ம் தேதி கனமழை காரணமாக ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 2,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆங்காங்கே சிக்கிக் கொண்டன. இந்நிலையில் 4 நாட்களுக்கு பிறகு நேற்று இச்சாலை திறக்கப்பட்டு, சிக்கிய வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.