ஜம்மு – காஷ்மீரின் ரியாசியில் நிலச்சரிவு காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக ஜம்மு – காஷ்மீரில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு – காஷ்மீரின் ரியாசியில் ஏற்பட்ட மேகவெடிப்பை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 30) அதிகாலை 3 மணியளவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இதில் ஐந்து குழந்தைகள் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடும் மழை காரணமக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாஹோர் பகுதியில் இருந்த அந்த வீடு நிலச்சரிவில் சிக்கியது குறித்து அதிகாலையில்தான் தெரியவந்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த குடும்பத்தினர் 4 மணி நேரம் மண்ணில் புதைந்து இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதே போல காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தின் ராஜ்காட் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்தனர். இருவரை காணவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.