ஸ்ரீநகர்: பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புகள் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ரகசிய ஏஜெண்டுகளை நியமித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் அப்துல்லா உள்ளிட்டோர் டிஜிட்டல் தளங்கள் வாயிலாக காஷ்மீர் இளைஞர்களை மூளைச் சலவை செய்து வருகின்றனர். வேறு சில தீவிரவாத அமைப்புகளும் காஷ்மீர் இளைஞர்களை ஈர்க்க விஷம பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தீவிரவாத அமைப்புகளின் சூழ்ச்சியில் சிக்கும் சில இளைஞர்கள், ‘ஸ்லீப்பர் செல்களாக’ செயல்பட்டு வருகின்றனர். அவர்களை அடையாளம் கண்டறிய ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் உளவுத்துறை அதிகாரிகள், நேற்று காஷ்மீர் முழுவதும் 10 இடங்களில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது குறிப்பிட்ட வீடுகளில் ரகசிய மின்னணு சாதனங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சிலர் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. சிலர் சந்தேகத்துக்குரிய செயலிகளை பயன்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். ரகசிய மின்னணு சாதனங்கள் மூலம் அவர்கள் யாரிடம் தொடர்பில் இருந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.