ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தின் பசந்த்கர் பகுதியில் உள்ள காண்ட்வா அருகே சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர், மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக பேசிய உத்தம்பூர் கூடுதல் எஸ்பி சந்தீப் பட், “இன்று காலை 10.30 மணியளவில் கட்வா பகுதியில், பசந்த்கர் பகுதியில் 187-வது பட்டாலியன் படைப்பிரிவை சேர்ந்த பங்கர் வாகனம் கவிழ்ந்தது. அப்போது மொத்தம் 23 சிஆர்பிஎப் வீரர்கள் அதில் இருந்தனர். வீரர்கள் பணியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது
விபத்தைத் தொடர்ந்து, மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டு, காயமடைந்த அனைவரையும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.” என்றார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சரும், உத்தம்பூர் மக்களவை உறுப்பினருமான ஜிதேந்திர சிங், “மீட்பு நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளன. உள்ளூர்வாசிகள் உதவ முன்வந்துள்ளனர். சாத்தியமான அனைத்து உதவிகளும் உறுதி செய்யப்படுகின்றன” என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, “உதம்பூர் அருகே நடந்த விபத்தில் சிஆர்பிஎப் வீரர்களின் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. தேசத்துக்கு அவர்கள் ஆற்றிய சிறந்த சேவையை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்.” என்றார்.