ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வைஷ்ணவி தேவி கோயிலுக்கான யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீருக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல, டெல்லிக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைஷ்ணவி தேவி கோயில் ரியாசி மாவட்டத்தில் கத்ராவுக்கு அருகிலுள்ள திரிகுடா மலைகளில் அமைந்துள்ளது. பக்தர்கள் இந்த கோயிலுக்கு பாரம்பரியமாக கத்ராவிலிருந்து 13 கி.மீ நடைபயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த சூழலில், கனமழை காரணமாக வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பாரம்பரியாக செல்லும் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த கோயிலுக்கு பேட்டரி கார் மற்றும் ஹெலிகாப்டர் சேவைகள் நிறுத்தப்பட்டன.
ராம்பன் மாவட்டத்தில் உள்ள சந்தர்கோட், கேலா மோர் மற்றும் பேட்டரி செஷ்மா ஆகிய மலைகளிலிருந்து கற்கள் விழுந்ததைத் தொடர்ந்து, முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக 250 கி.மீ ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களாக கனமழை பெய்வதால், ஜம்முவில் உள்ள அனைத்து ஆறுகள் மற்றும் ஓடைகளும் அபாய அளவை கடந்து பாய்ந்து கொண்டுள்ளது.
முன்னதாக, ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்குப் பிறகு நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக முதல்வர் உமர் அப்துல்லா கூறினார். மேலும், ஜம்முவில் வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
கதுவாவில் உள்ள தாரானா நதி, உஜ் நதி, மாகர் காட், சஹார் காட், ரவி நதி மற்றும் அவற்றின் துணை நதிகளில் நீர்மட்டம் திடீரென உயர்ந்து அபாய அளவை நெருங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், உதம்பூர் மாவட்டத்தில் உள்ள தாவி நதி 20 அடி எனும் அபாய அளவைத் தாண்டியுள்ளது. ஜம்முவில் உள்ள செனாப் நதியும் அபாய எச்சரிக்கை அளவை நெருங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். செனாப் நதியின் நீர்மட்டம் இன்று கனமழை காரணமாக அதிகரித்து 899.3 மீட்டரை எட்டியுள்ளது.
வானிலைத் துறையின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கதுவா மாவட்டத்தில் அதிகபட்சமாக 155.6 மிமீ மழை பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து தோடாவின் பதேர்வாவில் 99.8 மிமீ, ஜம்முவில் 81.5 மிமீ மற்றும் கத்ராவில் 68.8 மிமீ மழை பெய்துள்ளது.
ஜம்மு, ரியாசி, சம்பா, கதுவா, உதம்பூர், ராம்பன், தோடா மற்றும் கிஷ்த்வார் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்யும் என்ற வானிலை மையத்தின் முன்னறிவிப்பு காரணமாக, மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லிக்கு ரெட் அலர்ட்: டெல்லியின் பல மாவட்டங்களுக்கும், ஹரியானாவின் குருகிராம் போன்ற அதன் அருகிலுள்ள நகரங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை விடுத்தது.
தெற்கு டெல்லி, மேற்கு டெல்லி, வடமேற்கு டெல்லி, தென்மேற்கு டெல்லி மற்றும் புது டெல்லி மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தென்கிழக்கு, கிழக்கு மற்றும் வடக்கு டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், உத்தர பிரதேசத்தின் நொய்டா மற்றும் காசியாபாத்துக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.