புதுடெல்லி: கம்ப்யூட்டரில் நாம் மேற்கொள்ளும் அலுவலக பணிகளுக்கெல்லாம் நாம் வெளிநாட்டு நிறுவனங்களின் மென்பொருட்களைதான் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் உள்நாட்டு நிறுவனமான ஸ்ரீதர் வேம்புவின் சோஹோ நிறுவனம் ‘சோஹோ ஆபிஸ் சூட்’ என்ற ஆன்லைன் தளத்தை உருவாக்கியுள்ளது. இதில் உள்ள மென்பொருட்கள் மூலம் அனைத்து அலுவலக ஆவண பணிகளையும் மேற்கொள்ள முடியும்.
இந்நிலையில், மத்திய கல்வி துறை அமைச்சகம் அனைத்து அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சோஹோவின் உள்நாட்டு ஆபிஸ் ஆன்லைன் மென்பொருட்களை பயன்படுத்துவதன் மூலம், சுதேசி இயக்கத்தில் நாம் தைரியமான நடவடிக்கையை எடுக்கிறோம். உள்நாட்டு புதுமையுடன் இந்தியா முன்னேற நாம் அதிகாரம் அளிக்கிறோம். இதன் மூலம் உள்நாட்டு டிஜிட்டல் கட்டமைப்பு வலுவடைந்து, நமது தரவுகள் பாதுகாப்புடையதாகவும், தற்சார்புடையதாகவும் இருக்கும்.
இந்த மாற்றம், உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில், இந்தியாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும். சேவை பொருளாதாரம் என்ற நிலையிலிருந்து உற்பத்தி தேசம் என்ற நிலைக்கு நாடு செல்ல உதவும். மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும், அனைத்து அலுவலக ஆவணங்களுக்கும் சோஹோ ஆபிஸ் தளத்தை பயன்படுத்த வேண்டும். சோஹோ ஆபிஸ் தற்போது என்ஐசி மெயிலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால் தனி லாகின் அல்லது பதிவிறக்கங்கள் தேவையில்லை.
சோஹோவின் அனைத்து மென்பொருள் உபகரணங்களையும் பயன்படுத்தும் முறைகளை அதிகாரிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தொழில்நுட்ப உதவிக்கு சிபிஐஎஸ் / என்ஐசி பிரிவை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோஹோ ஆபிஸ் சூட் என்றால் என்ன? – சோஹோ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆன்லைன் தளம் ‘சோஹோ ஆபிஸ் சூட்’. இத்தளம் ஆவணங்கள், ஸ்பிரட் ஷீட் உட்பட அனைத்து அலுவலக பணிகளையும் பாதுகாப்பாக மேற்கொள்ள உதவுகிறது. சோஹோ ரைட்டர் மூலம் ஆவணங்களை தயார் செய்யலாம், சோஹோ ஷீட் மூலம் ஸ்பிரட்ஷீட் பணிகளை மேற்கொள்ளலாம். சோஹோ ஷோ மூலம் தகவல்களை தெரிவிக்கலாம். அனைத்தும் சோஹோ வொர்க்டிரைவ் வழியாக கிளவுடில் சேமிக்கப்படுகிறது. இதை பயன்படுத்துபவர்கள் எந்நேரமும், தங்களின் பணியை மேற்கொள்ளலாம்.