நாக்பூர்: சுற்றுலா நிமித்தமாக இமாச்சல் மாநிலம் மணாலிக்கு பயணித்த நாக்பூரை சேர்ந்த குடும்பத்தினருக்கு அந்த பயணம் மோசமானதாக அமைந்தது. மணாலியில் ஜிப்லைன் சாகசம் மேற்கொண்ட அந்த குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, கேபிள் அறுந்த காரணத்தால் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
நாக்பூரில் வசித்து வரும் பிரஃபுல்லா பிஜ்வே தம்பதியர் மற்றும் அவர்களது 10 வயது மகள் த்ரிஷா பிஜ்வே உடன் மணாலிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு கடந்த 8-ம் தேதி அவர்கள் தனியார் சாகச அனுபவங்களில் ஈடுபட்டுள்ளனர். அப்போது த்ரிஷா பிஜ்வே ஜிப்லைனில் ரைட் சென்றுள்ளார். பாதி வழியில் ஜிப்லைனின் கேபிள் அறுந்த காரணத்தால் சுமார் 30 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து த்ரிஷா படுகாயமடைந்தார்.
கீழே விழுந்ததில் அவரது கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. முதலில் மணாலியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சண்டிகர் மாற்றப்பட்டுள்ளார். தற்போது நாக்பூரில் தனியார் மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக அவரது குடும்பத்தினர், “எங்கள் மகள் விழுந்த இடத்தில் பாதுகாப்பு சார்ந்த ஏற்பாடும் எதுவும் முறையாக இல்லை. விபத்துக்கு பிறகு சரியான மருத்துவ உதவிகள் எதுவும் எங்களுக்கு துரிதமாக கிடைக்கவில்லை. இதற்கு ஜிப்லைனை இயக்குபவர்கள் தான் பொறுப்பு.
சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இது மாதிரியான இடங்களில் பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டியது அவசியம். அப்போது தான் எங்களை போல யாரும் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.” என தெரிவித்துள்ளனர்.
அவர்கள் சொல்வது போல சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடங்களில் ஜிப்லைன் ரைட் மாதிரியான சாகச அனுபவங்களில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலும் இதை இயக்குவது தனியார் நிறுவனங்கள் தான். அதனால் அது முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் இது மாதிரியான அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும் என சமூக செயற்பாட்டாளர்களும் கூறுகின்றனர்.