புதுடெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்குத் தடை கோரி அமைச்சர் ஐ. பெரியசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் 2006-2010 வரையிலான காலகட்டத்தில் வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அவர், அவரது மனைவி சுசீலா, மகனும் தற்போதைய பழநி தொகுதி எம்எல்ஏ-வுமான செந்தில்குமார், மற்றொரு மகன் பிரபு ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது.
உயர் நீதிமன்றம் உத்தரவு: இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோரை விடுவித்துத் திண்டுக்கல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும், இந்த வழக்கில் மீண்டும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து தினந்தோறும் விசாரணை நடத்தி வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட எம்.பி. எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி அமைச்சர் பெரியசாமி சார்பில் வழக்கறிஞர் மாளவிகா ஜெயந்த் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி அமர்வு இன்று விசாரிக்கிறது.