புதுடெல்லி: “தனக்கு முந்தைய அரசுகள் செய்த பணிகளுக்கான பெருமையையும் தானே எடுத்துக்கொள்ள பிரதமர் மோடி விரும்புகிறார்” என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்த சிறிது நேரத்தில் காங்கிரஸ் கட்சி இவ்வாறு சாடியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியது: “இந்த ரயில்வே திட்டத்துக்கான அனுமதி, கடந்த 1995-ம் ஆண்டு நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது வழங்கப்பட்டது. அடல் பிஹாரி வாஜ்பாய் இதனை தேசிய திட்டமாக அறிவித்தார். உத்தம்பூர், ஸ்ரீநகர், பாரமுல்லா இடையிலான 272 கி.மீ. தூரத்தில், 160 கி.மீ. தூரப்பாதை ஏற்கெனவே 2014-க்கு முன்பே திறக்கப்பட்டுவிட்டது. மோடி வந்து, ஒப்பந்தம் கொடுத்து, வேலைகள் நடந்தது என்பது போல இது நடக்கவில்லை.
இந்தத் திட்டத்தை நாங்கள் வாழ்த்துகிறோம். ஆனால், தொடர்ச்சியாக வந்த அரசு நிர்வாகங்களின் பணிகளின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி மறக்கக் கூடாது. இவற்றை சுயநலம் கொண்ட பிரதமரால் புரிந்துகொள்ள முடியாது. தனக்கு முந்தைய அரசுகள் செய்த பணிகளுக்கான பெருமையையும் மோடி தான் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என விரும்புகிறார்.
கடந்த 2005 ஏப்ரல் 13-ம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், ஜம்மு மற்றம் உத்தம்பூர் இடையிலான 53 ரயில் இணைப்பைத் திறந்து வைத்தார். பின்பு 2008 அக்.11-ல் ஸ்ரீநகருக்கு வெளியே ஆனந்த்நாக் மற்றும் மஜோம் இடையேயான 66 கி.மீ ரயில் இணைப்பைத் திறந்து வைத்தார். 2009 பிப்.14-ம் தேதி மஜோம் மற்றும் ஸ்ரீநகர் இடையிலான 31 கி.மீ. ரயில் இணைப்புத் திறக்கப்பட்டது. 2009,அக்.29-ல் அனந்த்நாக் மற்றும் காஷிகுண்ட் வரையிலான 18 கி.மீ. தூர ரயில் இணைப்புத் திறக்கப்பட்டது. 2013, ஜூன் 26-ல் காஷிகுண்ட் பானிஹால் வரையிலான 11 கி.மீ. ரயில் இணைப்புத் திறக்கப்பட்டது. இவை அனைத்தும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் திறக்கப்பட்டவை” என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
முன்னதாக, பிரதமர் மோடி உத்தாம்பூரில் உள்ள விமானப்படை தளத்துக்கு விமானம் மூலம் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் செனாப் பாலத்துக்கு வந்து, அந்த பாலத்தை முறையாக திறந்து வைத்தார். பொறியியல் அதிசயமான இந்தப் பாலம் காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது என்பது குறிப்பிடத்தகது.
பஹல்காமில் ஏப்.22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்பு, பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீர் சென்றுள்ளார். செனாப் பாலத்தைத் தவிர பிரதமர் மோடி, ஸ்ரீவைஷ்ணோ தேவி கத்ரா மற்றும், ஸ்ரீநகர் இடையே இரண்டு வந்தே பாரத் விரைவு ரயில்களையும் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.