புதுடெல்லி: சூப்பர் முதல்வராக ஆளுநர் செயல்பட முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் செய்தது தொடர்பாக அரசியலமைப்பு சட்ட ரீதியாக உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் 14 கேள்விகள் எழுப்பியுள்ளார். தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி சூர்யகாந்த் உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது. நேற்று நடந்த வாதம்:
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு ரிட் மனு தாக்கல் செய்ய முடியுமா? ஆளுநர், குடியரசுத் தலைவரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியுமா? என்பன போன்ற கேள்விகளை குடியரசுத் தலைவர் கேட்டுள்ளார். அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பிரச்சனைகளை வேறு வகையில்தான் தீர்வு காண முடியும். ஆளுநருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது. அதேபோலத்தான் உச்ச நீதிமன்றத்திலும் ஆளுநருக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்து உத்தரவு கோர முடியாது.
நீதிபதிகள்: ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி இல்லையா?
துஷார் மேத்தா: மாநில அமைச்சரவை ஆலோசனைப்படி ஆளுநர் செயல்படுகிறாரே தவிர, மத்திய அமைச்சரவையின் ஆலோசனைப்படி அல்ல. இருப்பினும், அவர் குடியரசுத் தலைவருக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர். உச்ச நீதிமன்றத்தில் பெரும்பாலான வழக்குகளில் ஆளுநர்களுக்காக மத்திய அரசே ஆஜராகி வாதிடுகிறது. மாநில அரசின் நிர்வாக அதிகாரங்கள் ஆளுநர்களிடம் உள்ளன. எனவே, ஆளுநர் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு மாநில அரசு ரிட் மனு மூலம் தீர்வு காண முடியாது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி: மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும். சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்குஅனுப்புவதாக இருந்தாலும் அமைச்சரவையின் ஆலோசனைப்படியே செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. ஆளுநர் அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். அதேபோல, மாநில அரசை கட்டுப்படுத்தும் சூப்பர் முதல்வராகவும் ஆளுநர் இருக்க முடியாது. ஆளுநரும், முதல்வரும் இருமுனை கத்திகள் போல எதிர் எதிர் துருவங்களாக செயல்பட முடியாது.
தலைமை நீதிபதி: மத்திய அரசின் சட்டத்துடன் முரண்படும் மசோதாவை மாநில அரசு மறுநிறைவேற்றம் செய்து அனுப்பினால், அதை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்ப முடியாதா?
அபிஷேக் மனு சிங்வி: மறுநிறைவேற்றம் செய்யப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க முடியாது. மசோதாவை ஆளுநர் ஆராயவும் முடியாது. அது அவரது வேலை அல்ல. மாநில அரசு சரியான மசோதாவைத்தான் கொண்டு வரும். ஒருவேளை அது முரண்பட்டு இருந்தால், சரிசெய்ய நீதிமன்றங்கள் உள்ளன. அந்த மசோதா முரண்பாடாக இருக்கிறது என்றால் அதை முதல்முறையே குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்பலாம்.இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் செப்.2-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.