புதுடெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த கிராமம் சுற்றுலாத் தலமாகிறது. இதற்காக, உத்தர பிரதேச அரசு ரூ.27 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமரான, பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் 101-வது பிறந்த நாள் வரும் டிசம்பர் 24-ல் கொண்டாடப்பட உள்ளது. இதை விமரிசையாகக் கொண்டாட மத்திய அரசும் பாஜகவும் தயாராகி வருகிறது.
இச்சூழலில், ஆக்ராவில் உள்ள வாஜ்பாயின் மூதாதையர் கிராமமான படேஷ்வரை ஒரு முக்கிய ஆன்மிக மற்றும் பாரம்பரிய சுற்றுலா தலமாக மாற்ற உத்தர பிரதேச சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த கிராமத்தில் மொத்தம் 101 சிவன் கோயில்கள் உள்ளன. இதை மேம்படுத்தி அங்கு, யாத்ரீக அனுபவத்தை ஏற்படுத்த உ.பி. அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக ரூ.27 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. பிரோசாபாத் சாலையில் அமைந்துள்ள படேஷ்வர் கிராமத்துக்கு பிரம்மாண்டமான ஒரு நுழைவு வாயில் அமைக்கப்பட உள்ளது. இக்கிராமத்தின் முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்கு தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
இதன் மூலம், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள், அருகிலுள்ள படேஷ்வருக்கும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பிரதேச எல்லையான சம்பல் பள்ளத்தாக்கின் அருகே படேஷ்வர் அமைந்துள்ளது. இது, அதன் பண்டைய படேஷ்வர்நாத் கோயிலுக்கும், பிரதிஹாரா வம்சத்தின்போது நாகரா பாணி கட்டிடக்கலையில் கட்டப்பட்ட 101 சிவன் கோயில்களுக்கும் பெயர் பெற்றது.
இக்கோயில்களின் தல புராணத்தின்படி, சிவபெருமான் ஒரு காலத்தில் இங்கு ஒரு ஆலமரத்தின் கீழ் ஓய்வெடுத்ததாக நம்பப்படுகிறது. இந்த இடத்தின் தனித்துவமான அம்சம் ஆக்ராவில் ஓடும் யமுனை நதியின் தலைகீழ் ஓட்டம் ஆகும். இது மட்டுமல்லாமல், அங்கு மீசை மற்றும் பெரிய கண்களைக் கொண்ட சிவன் மற்றும் பார்வதி தேவியின் சிலைகளும் உள்ளன.