புதுடெல்லி: சல்வா ஜூடும் தீர்ப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி மீதான உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து துரதிர்ஷ்டவசமானது என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பாரபட்சமான தவறான விளக்கம் என்றும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
2011ஆம் ஆண்டு சல்வா ஜூடும் தீர்ப்பின் மூலம் சுதர்சன் ரெட்டி “நக்சலிசத்தை ஆதரித்தார்” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டினார். அப்போது, உச்ச நீதிமன்றம், விழிப்புணர்வு இயக்கத்திற்கு எதிராக தீர்ப்பளிக்காவிட்டால் 2020 ஆம் ஆண்டளவில் நக்சல் தீவிரவாதம் முடிவுக்கு வந்திருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், நக்சல் எதிர்ப்பு முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கும் ஒரு சித்தாந்தத்தால் சுதர்சன் ரெட்டி ஈர்க்கப்பட்டதாகவும் அமித்ஷா குற்றம் சாட்டினார்.
அமித்ஷாவின் இந்த கருத்துக்களுக்கு எதிராக ஓய்வுபெற்ற நீதிபதிகள் 18 பேர் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில்,’சல்வா ஜூடும் தீர்ப்பு எந்த வகையிலும் நக்சலிசத்தை ஆதரிக்கவில்லை. அமித் ஷாவின் கருத்துக்கள் நீதித்துறை பகுத்தறிவை சிதைக்கிறது. ஒரு மூத்த அரசியல் தலைவர் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தவறாக சித்தரிப்பது நீதித்துறை சுதந்திரத்தில் உறைய வைக்கும் விளைவை ஏற்படுத்தும்.
அரசியல் ரீதியாக பேசும்போது நிதானத்தையும் நாகரிகத்தையும் கடைபிடிக்க வேண்டும். சித்தாந்தப் போராட்டங்கள் பிரச்சாரங்களின் ஒரு பகுதியாக இருக்கலாம், ஆனால் அவை கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான பிரச்சாரம் சித்தாந்த ரீதியாக இருக்கலாம், ஆனால் அதை நாகரிகமாகவும் கண்ணியமாகவும் நடத்த வேண்டும். இரண்டு வேட்பாளர்களின் சித்தாந்தத்தையும் விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும். அமித் ஷாவின் கருத்து துரதிர்ஷ்டவசமானது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீதான பாரபட்சமான தவறான விளக்கம்’ எனத் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ஜே.செலமேஸ்வர், ஏ.கே.பட்நாயக், அபய் ஓகா, விக்ரம்ஜித் சென் மற்றும் கோபால கவுடா ஆகியோருடன் முன்னாள் தலைமை நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். முரளிதர், கோவிந்த் மாத்தூர், சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் அஞ்சனா பிரகாஷ் ஆகியோரும் இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.
நக்சல்களை எதிர்க்க சத்தீஸ்கர் அரசாங்கம் பழங்குடி இளைஞர்களை கொண்டு சல்வா ஜூடும் எனும் போராளிக்குழுவை அமைக்க முடிவு செய்தது. ஆனால், மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பழங்குடி இளைஞர்களை பயன்படுத்துவது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று 2011ல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி மற்றும் எஸ்.எஸ். நிஜ்ஜார் ஆகியோரால் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் அந்த அமைப்பை கலைக்கவும் உத்தரவிட்டனர்.