புதுடெல்லி: இந்தியாவில் 79-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்ய அதிபர் புதின் இந்திய சுதந்திர தின வாழ்த்துகளை அனுப்பி உள்ளார். அதில், குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா தகுதிவாய்ந்த மரியாதைக்குரிய நாடாக விளங்குகிறது.
இந்திய – ரஷ்ய உறவு மிகவும் சிறப்பானது, முன்னுரிமையை அடிப்படையாக கொண்டது, பாதுகாப்புத் துறை இணைந்து செயல்பட கூடியது என்று புதின் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், ரஷ்யாவின் நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடாக இந்தியா உள்ளது என்று புதின் கூறியிருக்கிறார்.
சமூக பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் இதர துறைகளில் இந்தியா அங்கீகரிக்கப்பட்ட வெற்றியை பெற்றுள்ளது. உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அத்துடன் உலகளவில் மிக முக்கியமான விவகாரங்களில் இந்தியா தனது பங்களிப்பை வழங்கி வருகிறது என்று புதின் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளின் கூட்டு முயற்சியால் ஒத்துழைப்பை தொடர்ந்து விரிவுபடுத்துவோம். இவ்வாறு ரஷ்ய தூதரகம் கூறியுள்ளது.