புதுடெல்லி: ராகுல் காந்தியை ‘சீன குரு’ எனக் கூறி கேலி செய்த ஜெய்சங்கர், தனக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு மாநிலங்களவையில் பதிலடி கொடுத்தார்.
2023 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, “சீனாவைப் பற்றிய வெளியுறவு அமைச்சரின் புரிதல் மேலோட்டமானது. நான் வெளியுறவு அமைச்சருடன் ஒரு உரையாடலை நடத்தினேன். அவருக்கு அது புரியவில்லை,” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சீனா தொடர்பான விவாதத்தில் இன்று பங்கேற்று உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “சீனா குறித்த அதிக ஞானத்தை சிலர் வழங்கி இருக்கிறார்கள். எனக்கு சீனாவைப் பற்றி அதிகம் தெரியாது என்று சிலர் கூறியுள்ளனர்.
நான் வெளியுறவுத்துறையில் 41 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். சீனாவில் அதிக ஆண்டுகள் தூதராக இருந்துள்ளேன். இப்போது ‘சீன குருக்கள்’ உள்ளனர். இங்குள்ள உறுப்பினர் ஒருவர், சீனா மீது அவருக்கு அதிக பற்று இருப்பதால் சிந்தியா (சீனா மற்றும் இந்தியாவின் இணைப்பு) என்ற வார்த்தையை உருவாக்கினார்.” என தெரிவித்தார்.
2000-ம் ஆண்டுகளின் முற்பகுதியில் ‘சிந்தியா’ என்ற வார்த்தையை உருவாக்கியவர் ஜெய்ராம் ரமேஷ். அவரை மறைமுகமாக கேலி செய்யும் வகையில் ஜெய்சங்கர் இந்த வார்த்தையை குறிப்பிட்டுப் பேசி உள்ளார்.
2014-ம் ஆண்டு சீனாவின் அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியில், “10 ஆண்டுகளுக்கு முன்பு ‘சிந்தியா’ என்ற கருத்தை நான் முன்மொழிந்தபோது இந்தியாவும் சீனாவும் ஒத்துழைத்து எதிர்கால சவால்களை எதிர்கொள்ள ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதே யோசனையாக இருந்தது.
‘சிந்தியா’ என்பது காலாவதியான தொலைநோக்குப் பார்வை அல்ல. உண்மையில் இரு நாடுகளின் அரசாங்கங்களும் அதைத்தான் முன்னெடுத்து வருகின்றன. இந்தியாவும் சீனாவும் இயற்கையான பகைவர்கள் என கருதுபவர்களால் பாதிக்கப்படக்கூடியதாக இரு நாடுகளும் இருக்கக்கூடாது.” எனக் கூறி இருந்தார்.
தனது உரையின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் ஜெய்சங்கர் கேலி செய்தார். “சீனாவும் பாகிஸ்தானும் மிகவும் நெருக்கமாகிவிட்டதாக சீன குரு கூறுகிறார். அவர்கள் மிகவும் நெருக்கமாக இருப்பது எதனால்? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் அதற்குக் காரணம். இரு நாடுகளின் நிலங்களையும் இணைக்கும் பகுதியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் உள்ளது.” என தெரிவித்தார்.
2023-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய ராகுல் காந்தி, “சீனா பற்றிய வெளியுறவு அமைச்சரின் புரிதல் மேலோட்டமானது. நான் வெளியுறவு அமைச்சருடன் ஒரு உரையாடலை நடத்தினேன். அவருக்கு அது புரியவில்லை.” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.