புதுடெல்லி: புல்லட் ரயில், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை மேற்கொள்ள சுரங்கம் தோண்டும் இயந்திரங்களின் தேவை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் சீனா மற்றும் ஜெர்மனியிடம் இருந்து சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஜெர்மனியின் ஹெர்ரென்க்நெக்ட் நிறுவனத்திடம் இருந்து அதிக இயந்திரங்கள் வாங்கப்படுகின்றன.
ஜெர்மனியின் ஹெர்ரென்க்நெக்ட் நிறுவனத்துக்கு சீனாவின் குவாங்சூ, வூஹான், செங்டூ ஆகிய பகுதிகளில் மிகப் பெரிய ஆலைகள் செயல்படுகின்றன. இந்த ஆலைகளில் தயாரிக்கப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மேன் கூறியதாவது: ஜெர்மனியின் ஹெர்ரென்க்நெக்ட் நிறுவனத்தின் சீன ஆலையில் இருந்து 3 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சீன சுங்கத் துறை அதிகாரிகள், சுரங்க இயந்திரங்களின் ஏற்றுமதியை உள்நோக்கத்தோடு தடுத்து நிறுத்தினர்.
மிக நீண்ட போராட்டத்துக்கு பிறகு 2 சுரங்க இயந்திரங்கள் அண்மையில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 3-வது சுரங்க இயந்திரம் விரைவில் இந்தியா வந்து சேரும். சீனாவின் முட்டுக்கட்டையை முறியடிக்க ஹெர்ரென்க்நெக்ட் நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் புதிய ஆலை அமைக்கப்படும். இந்தியாவிலேயே சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தயாரிக்கப்படும்.
ஒரு காலத்தில் உற்பத்திக்காக சீனாவையும். பாதுகாப்புக்காக அமெரிக்காவையும், எரிசக்திக்காக ரஷ்யாவையும் சார்ந்து இருந்தோம். இதை மாற்ற முடிவு செய்திருக்கிறோம். இவ்வாறு பிலிப் அக்கர்மேன் தெரிவித்தார்.