புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சீன ராணுவ தொழில்நுட்பத்தின் புகழ் பாடுவதை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வாடிக்கையாக வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சீன ராணுவ தொழில்நுட்பம், ஆயுதங்களுக்கு ஆதரவாக அவர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு மக்களவை கூட்டத்தின்போது, லடாக்கில் சீனாவின் மோதல் போக்கை ஆதரிக்கும் வகையில் ராகுல் பேசினார். சீன மாடல் கண்காணிப்பு ட்ரோன்களை நாம் ஏன் பயன்படுத்தக்கூடாது என்று அவர் கேள்வியும் எழுப்பினார்.
கடந்த 2023-ம் ஆண்டில் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடலில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது, தொழில்நுட்ப பந்தயத்தில் சீனா வெற்றி பெற்று வருகிறது. ராணுவ தொழில்நுட்பங்கள், ராணுவ பயன்பாட்டுக்கான ட்ரோன் தொழில்நுட்பங்களில் சீனா முன்னோடியாக இருக்கிறது. அந்த நாட்டிடம் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ராகுல் அறிவுரை கூறினார்.
கடந்த 2022-ல் பாதுகாப்புத் துறை நிபுணர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது சீன மாடல் ட்ரோன்களை இந்திய ராணுவம் கண்காணிப்பு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று அவர் அறிவுரை கூறினார். இந்திய பாதுகாப்புப் படைகள் குறித்து எதிர்மறையாக பேசுவதும், எதிரிகளின் தொழில்நுட்பங்களை போற்றிப் புகழ்வதும் ராகுல் காந்தியின் கொள்கையாக இருந்து வருகிறது. இதுதான் தேசப்பற்றா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.