பெங்களூரு: ‘பல நாட்களாக சூரிய ஒளியைப் பார்க்கவில்லை. எனது கைகளில் பூஞ்சை உருவாகியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் என்னால் உயிர் வாழ முடியாது. தயவுசெய்து எனக்கு விஷமாவது கொடுங்கள்” என்று சிறையில் உள்ள நடிகர் தர்ஷன் இன்று நீதிபதியிடம் முறையிட்டார்.
பிரபல கன்னட நடிகரான தர்ஷன் தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் உள்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி தர்ஷனுக்கு சிறையில் எந்த சிறப்பு வசதிகளும் செய்து கொடுக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தர்ஷன் மீண்டும் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள நடிகர் தர்ஷன் மாதாந்திர விசாரணையின்போது இன்று சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் 64-வது சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது பேசிய அவர், “பல நாட்களாக நான் சூரிய ஒளியைப் பார்க்கவில்லை. எனது கைகளில் பூஞ்சை உருவாகியுள்ளது. எனது உடையில் துர்நாற்றம் வீசுகிறது. இனி இதே போன்ற சூழலில் என்னால் இப்படி உயிர் வாழ முடியாது. தயவுசெய்து, எனக்கு விஷம் கொடுங்கள். இங்கு வாழ்க்கையை இப்படியே தொடர நான் விரும்பவில்லை” என்று அவர் கூறினார். இதற்கு பதிலளித்த நீதிபதி, “இதுபோன்ற விஷயங்களைச் செய்ய முடியாது. அது சாத்தியமில்லை” என்று கூறினார்.