பெங்களூரு: வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு (34) சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறையில் அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அவர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண் 15528 வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தண்டனைக்கான முதல் இரவை அவர் சிறையில் கழித்தார். கண்ணீர் விட்டு அழுததுடன், மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக சிறை மருத்துவர்கள் அன்று இரவு அவரது உடல்நிலையை பரிசோதித்தனர். அப்போது, தனது வேதனைகளை மருத்துவர்களிடம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாகவும் பிரஜ்வல் ரேவண்ணா கூறியுள்ளார்.
கைதி எண் 15528 ஒதுக்கீடு: முன்னாள் எம்.பி. என்பதால் தற்போது அவர் உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் கைதிகளுக்கு உரிய ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். நேற்று காலை அவருக்கு அதிகாரப்பூர்வமாக கைதி எண் 15528 ஒதுக்கப்பட்டது. இவ்வாறு சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.