புதுடெல்லி: சிறையில் இருந்தபடி பிரதமர் ஆட்சி செய்யலாமா என மத்திய அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவையில் அரசியல் சாசன (130-வது திருத்த) மசோதா கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி, 5 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றச்சாட்டின் கீழ் பிரதமரோ முதல்வரோ அமைச்சர்களோ கைது செய்யப்பட்டு, 30 நாட்களுக்கு மேல்சிறையில் இருந்தால், சம்பந்தப்பட்டவரின் பதவி தானாகவே பறிபோகும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில் இதுகுறித்து கூறியதாவது: இப்போது உள்ள சட்டப்படி, சிறையில் இருக்கும் ஒருவர் அரசை அமைக்கலாம். சிறையை முதல்வர் அல்லது பிரதமர் அலுவலகமாக மாற்றலாம். இது எப்படி சரியாகும்? பிரதமரோ அல்லது முதலமைச்சரோ, நாட்டையோ அல்லது ஒரு மாநிலத்தையோ சிறையில் இருந்து ஆட்சி செய்யலாமா? இந்த நடைமுறையை நானும் என்னுடைய கட்சியும் முழுமையாக நிராகரிக்கிறோம்.
சிறையில் இருக்கும் ஒருவர் நாட்டை ஆட்சி செய்யக்கூடாது. இந்த மசோதா, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த 39-வது திருத்தம் போன்றது அல்ல. அந்த மசோதா பிரதமர் உள்ளிட்டோருக்கு விலக்கு அளித்திருந்தது. ஆனால் இப்போதைய மசோதாவுக்கு பிரதமரும் கட்டுப்பட்டவர் ஆவார். இந்த மசோதாவில் தன்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
எதிர்க்கட்சிகள் கூறுவது போல் இந்த சட்டம் பழிவாங்கும் நோக்கில் பயன்படுத்தப்பட மாட்டாது. குறிப்பாக, குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லாவிட்டால் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபருக்கு 30 நாட்களுக்குள் ஜாமீன் வழங்கிவிடும். அரசை சிறைகளில் இருந்து நடத்த முடியுமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் அமித் ஷா தெரிவித்தார்.