ஹைதராபாத்: இந்துக்களைக் காட்டிலும் சிறுபான்மையினர் தான் அரசிடம் இருந்து அதிக நிதி, ஆதரவை பெறுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதற்கு எதிர்வினையாற்றியுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ‘சிறுபான்மையினருக்கு கிடைப்பது அடிப்படை உரிமை; நன்கொடை அல்ல” என்று பதிலடி தந்துள்ளார்.
“குடியரசு நாடான இந்தியாவின் அமைச்சர் நீங்கள். மன்னர் அல்ல. நீங்கள் அரசமைப்பின் முறைப்படி பதவியில் உள்ளீர்கள். சிறுபான்மையினருக்கு கிடைப்பது அடிப்படை உரிமை; நன்கொடை அல்ல. பாகிஸ்தானியர், வங்கதேசத்தவர், ஜிஹாதி, ரோஹிங்கியா மக்கள் என அன்றாடம் சொல்வதுதான் ஆதாயமா? கூட்டமாக இணைந்து தாக்குவதுதான் பாதுகாப்பா? இந்திய மக்கள் கடத்தப்பட்டு வங்கதேசத்தில் வலுக்கட்டாயமாக புகுத்துவது பாதுகாப்பா?
அதுவும் இல்லையென்றால் எங்களது வீடுகள், வழிபாட்டு கூடங்களை புல்டோசர் கொண்டு இடிப்பதா? அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக நசுக்கப்படுவது பாதுகாப்பா? அனைத்துக்கும் மேலாக பிரதமரின் வெறுப்பு பேச்சுகளுக்கு டார்கெட்டாக இருப்பதா? இந்தியாவில் முஸ்லிம்கள் குடிமக்களாக சமமான முறையில் நடத்தப்படுவதில்லை. இரண்டாம் தர குடிமக்களாக கூட நாங்கள் கருதப்படுவதில்லை; பிணைக் கைதிகளாக உள்ளோம்” என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவை டேக் செய்து அசாதுதீன் ஒவைசி எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
கிரண் ரிஜிஜு என்ன சொன்னார்? – “கடந்த 11 ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, அனைவரின் ஆதரவுடன், அனைவரின் நம்பிக்கையுடன், அனைவரின் முயற்சிகளுடன் அனைவரின் வளர்ச்சியையும் உறுதிப்படுத்துவது என்ற கொள்கையை முன்னெடுத்து வருகிறது. இந்தக் கொள்கையைப் பின்பற்றி, சிறுபான்மை விவகார அமைச்சகம் கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துகிறது. இதனால், சிறுபான்மை சமூகங்கள் நாட்டின் வளர்ச்சியுடன் இணைந்து சுறுசுறுப்பான, சமமான பங்கேற்பாளர்களாக இருக்கிறார்கள்.
நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், பெரும்பான்மை சமூகமான இந்துக்களைக் காட்டிலும் சிறுபான்மை சமூகங்கள் அரசிடம் இருந்து அதிக நிதியையும் ஆதரவையும் பெறுகின்றன. இந்துக்களுக்கு என்ன கிடைக்கிறதோ, அது சிறுபான்மையினருக்கும் கிடைக்கிறது. ஆனால், சிறுபான்மையினருக்கு என்ன கிடைக்கிறதோ, அவை இந்துக்களுக்குக் கிடைப்பதில்லை” என கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தார்.