திருவனந்தபுரம்: கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கேரளாவின் ஆளும் இடது ஜனநாயக முன்னணியும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் இணைந்து இந்த தீர்மானத்தை இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றி உள்ளன. அந்த தீர்மானத்தில், “கேரளாவில் இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் நோக்கில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தவறான செயல். அதோடு, கடந்த 2002-ம் ஆண்டு எடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் ஆவணத்தை அடிப்படையாக வைத்து சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பது அறிவியல்பூர்வமானது அல்ல.
தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு சுற்று வழியாகவே சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் கைகொள்கிறது என்ற கவலை பரவலாக உள்ளது. இந்த கவலை பிஹாரில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு தீவிர திருத்தம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. அரசியல் சாசன ரீதியில் இது செல்லத்தக்கதா என்பது குறித்து நீதிமன்றம் இன்னும் தீர்ப்பளிக்கவில்லை என்றாலும், இதை நியாயமானது என கருத முடியாது. குடியுரிமையை மத அடிப்படையிலானதாக மாற்ற முயற்சிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர முயற்சிப்பது ஜனநாயகம் எதிர்கொள்ளும் ஒரு சவாலாக உள்ளது.
1987-க்குப் பிறகு பிறந்தவர்கள் வாக்குரிமையைப் பெற, பெற்ரோரில் ஒருவரின் குடியுரிமைச் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை, வயது வந்தோர் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு என்ற முடிவை மறுப்பதற்குச் சமம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி யு.கேல்கர் கடந்த 20-ம் தேதி கூட்டிய கூட்டத்தில் பங்கேற்று ஆளும் எல்டிஎஃப், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான யுடிஎஃப் ஆகியவை தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. மேலும், கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வரையில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதை ஒத்திவைக்குமாறும் அவை வேண்டுகோள் வைத்தன.
அதோடு, சிறப்பு தீவிர திருத்தத்துக்கான ஆவணங்களின் பட்டியலில் ரேஷன் கார்டை சேர்க்கவும் அவை வலியுறுத்தின. இதையடுத்து, கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கேல்கர் பரிந்துரைத்தார். சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்பார்வையிடும் அதிகாரிகள், உள்ளாட்சித் தேர்தல் அதிகாரிகளாகவும் செயல்பட வேண்டும் என்பதால் அவர் இந்த பரிந்துரையை அளித்துள்ளார். எனினும், இந்திய தேர்தல் ஆணையத்தின் பதில் இதுவரை வெளியாகாததால், சட்டப்பேரவையில் தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.