பாட்னா: பிஹார் மாநிலத்தில் கடந்த சில தேர்தல்களில் லோக் ஜனசக்தி கட்சி, சிபிஎம்-எல், ஹெச்ஏஎம் போன்ற சிறிய கட்சிகள் பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளன. 243 உறுப்பினர்களைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில், சிறிய கட்சிகள் மீதான கவனமும் அதிகரித்துள்ளது.
பிஹாரில் மிகப்பெரிய கட்சிகள் என்றால் அது லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தான். அதுபோல தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் அம்மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற. இந்த நிலையில் பிஹாரில் தாக்கத்தை உருவாக்கும் சிறிய கட்சிகள் குறித்து பார்ப்போம்.
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்): மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் எல்ஜேபி(ஆர்வி) கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிராக் பாஸ்வான் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இக்கட்சிக்கு பட்டியல் சமூக வாக்குகள் பெருமளவில் உள்ளது. எனவே கடந்த கால தேர்தல்களில் இக்கட்சி பெரும் தாக்கத்தை உருவாக்கியது.
2020 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட எல்ஜேபி, ஒரு தொகுதியில் மட்டுமே வென்ற போதிலும், பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயித்தது.
2020 தேர்தலில் எல்ஜேபி தனித்துப் போட்டியிட்டு ஒன்பது இடங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தாலும், 93 இடங்களில் மூன்றாவது இடத்தையும், 32 இடங்களில் நான்காவது இடத்தையும் பிடித்தது. அக்கட்சி 13 இடங்களில் 20% முதல் 30% வாக்குகளைப் பெற்றது, 43 இடங்களில் 10% முதல் 20% வாக்குகள் மற்றும் 77 இடங்களில் 10% க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றது.
அப்போது எல்ஜேபி என்டிஏ கூட்டணியில் இருந்திருந்தால் கூடுதலாக 27 இடங்களை வென்றிருக்கலாம். அதேபோல எல்ஜேபியால் ஆர்ஜேடி, காங்கிரஸின் மகாகத்பந்தன் 31 இடங்களில் தோற்றது. அந்த 31 இடங்களில் வென்றிருந்தால் மகாகத்பந்தன் 122 இடங்களை வென்று ஆட்சியமைத்திருக்கும். 2024 மக்களவைத் தேர்தலில் என்டிஏ அணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட எல்ஜேபி(ஆர்வி) அனைத்து இடங்களையும் வென்றது. எனவே இக்கட்சி 2025 சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
சிபிஐ(எம்எல்) லிபரேசன்: பிஹாரில் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடதுசாரி கட்சியாக சிபிஐ(எம்எல்)எல் உள்ளது. ஒருங்கிணைந்த பிஹார் காலத்திலிருந்தே இக்கட்சி பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
2020 தேர்தலில் மகா கூட்டணியில் இக்கட்சி போட்டியிட்ட 19 இடங்களில் 12 இடங்களை வென்றது. 70 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸை விட இக்கட்சி சிறப்பாக செயல்பட்டது. 2024 மக்களவைத் தேர்தலில், மகா கூட்டணியில் மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஐ(எம்எல்)எல், இரண்டு இடங்களை வென்றது. அக்கட்சி இப்போது மகா கூட்டணியில் உள்ளது. எனவே இக்கட்சியில் பிஹாரில் தற்போது முக்கிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா: 2014 மக்களவைத் தேர்தலில் ஜேடியு கட்சி மோசமான தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று நிதிஷ்குமார் ராஜினாமா செய்த பிறகு, ஜிதன் ராம் மஞ்சி பிஹார் முதல்வராக பொறுப்பேற்றார். இருப்பினும், நிதிஷ் மீண்டும் பதவியேற்றபோது, மஞ்சி பதவியை விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டார்,இதன் விளைவாக அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பின்னர் மஞ்சி இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியை உருவாக்கி, 2019 மக்களவைத் தேர்தலில் மகாகத்பந்தன் கூட்டணியில் மூன்று இடங்களில் போட்டியிட்டு தோற்றது. 2020 சட்டப்பேரவைத் தேர்தலில், என்டிஏ கூட்டணியில் இணைந்த ஹெச்ஏஎம் கட்சி, ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு 4ல் வென்றது. சிறிய கட்சியாக இருந்தாலும், முசாஹர் பட்டியலின சமூகத்தில் மஞ்சியின் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில், என்டிஏ கூட்டணியில் கயா தொகுதியில் மட்டும் போட்டியிட்ட ஹெச்ஏஎம் கட்சியின் மஞ்சி வெற்றிபெற்று மத்திய அமைச்சராக உள்ளார்.
ஜன் சுராஜ் கட்சி: தேர்தல் வியூகவாதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோர்தான் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர். இவர் 2 ஆண்டுகளாக மாநிலம் தழுவிய நடைபயணம் சென்று வருகிறார். 2024 நவம்பரில் பிஹாரில் நடந்த நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சி அனைத்து இடங்களிலும் தோற்றது. அக்கட்சியில் இரண்டு வேட்பாளர்கள் டெபாசிட் இழந்த போதிலும், இரண்டு இடங்களில் ஜன் சுராஜ் கட்சி, ஆர்ஜேடியின் வெற்றியை பின்னுக்கு தள்ளியது.
மாநிலம் முழுவதும் தனக்கு செல்வாக்கு உள்ளதாக சொல்லி வருகிறார் பிரசாந்த் கிஷோர், இவர் வெற்றி பெறாவிட்டாலும், ஆர்ஜேடி, சிபிஐ(எம்எல்) எல் போன்ற கட்சிகளின் வாக்குகளை உடைப்பார் என சொல்லப்படுகிறது.
ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா: ஜேடியு முக்கிய தலைவராக இருந்த உபேந்திர குஷ்வாஹா 2013 ஆம் ஆண்டில், நிதிஷின் மோசமான நிர்வாகத்தைக் காரணம் காட்டி அக்கட்சியிலிருந்து விலகி ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியை (ஆர்எல்எஸ்பி) உருவாக்கினார். 2020 தேர்தலில்
2020 ஆம் ஆண்டில், ஆர்.எல்.எஸ்.பி, ஏஐஎம்ஐஎம், பிஎஸ்பி, எஸ்பிஎஸ்பி மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் மூன்றாவது அணியை உருவாக்கியது. இக்கூட்டணியில் 99 இடங்களில் போட்டியிட்டு, ஒன்றில் கூட வெல்லாத ஆர்எல்எஸ்பி 1.8% வாக்குகளை மட்டுமே பெற்றது.
ஆனாலும் 2020ல் அக்கட்சி 33 இடங்களில் வெற்றி தோல்வியை பாதிக்கும் அளவுக்கு வாக்குகளைப் பெற்றது. இக்கட்சியால் 18 இடங்களில், என்டிஏ கட்சிகள் இரண்டாவது இடத்தைப் பிடித்து தோல்வியடைந்தன. அதே நேரத்தில் மகாகத்பந்தன் கட்சிகள் 14 இடங்களில் தோற்றது.
2020 தேர்தலில் மோசமான தோல்விக்குப் பிறகு ஆர்.எல்.எஸ்.பி, ஜே.டி(யு) உடன் இணைந்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டில், மீண்டும் நிதிஷ் மீது அதிருப்தி அடைந்த குஷ்வாஹா, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சாவை தோற்றுவித்தார் 2024 மக்களவைத் தேர்தலில் ஆர்எல்எம் ஒரு இடத்தில் மட்டுமே போட்டியிட்டு தோல்வியடைந்தது.