விசாகப்பட்டினம்: சிம்மாசலம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் சுவர் இடிந்து விழுந்து 7 பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்தில் தேவஸ்தான அதிகாரி மற்றும் 6 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாசலத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. மலைக்கோயிலான இங்கு வருடாந்திர சந்தன உற்சவம் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி நடைபெற்றது.
முன்னதாக அதிகாலை 2.30 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருந்த பக்தர்கள் மீது சமீபத்தில் கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்தது. இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த 3 உறுப்பினர் குழுவை ஆந்திர அரசு நியமித்தது. இக்குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் அளித்தது.
அக்குழு தனது அறிக்கையில், “முறையான வடிவமைப்பு மற்றும் திட்டமிடல் இன்றி அவசர அவசரமாக சுவர் கட்டப்பட்டுள்ளது. அடித்தளமும் பலமாக இல்லாததால் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது” என கூறப்பட்டிருந்தது.
அதன்பேரில், சுவர் எழுப்ப அனுமதி வழங்கிய சிம்மாசலம் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பாராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தேவஸ்தானத்தின் தலைமை பொறியாளர் ஸ்ரீநிவாசராஜு, இணை பொறியாளர் கே.வி.எஸ். மூர்த்தி, உதவி பொறியாளர் பாப்ஜி, சுற்றுலா துறை தலைமை பொறியாளர் ரமணா, செயல் இயக்குநர் ஆர்.வி.எல்.ஆர். சுவாமி, உதவி பொறியாளர் மதன்மோகன் ஆகிய 6 பொறியாளர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இது தவிர, சுவர் கட்டிய ஒப்பந்ததாரர் மீது லட்சுமி நாராயணா மீது குற்ற வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ராமசந்திரமோகனும் இந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.