சாட்டன்: வடக்கு சிக்கிமில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாட்டன் பகுதியில் இருந்து நேற்று 27 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 7 ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 34 பேர் விமானம் மூலமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
சிக்கிமில் மோசமான வானிலை தொடர்ந்து நிலவும் நிலையில், அவசரகால மீட்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முதல் வெற்றிகரமான வான்வழி வெளியேற்றம் இதுவாகும். சாட்டனில் இருந்து பாக்யோங் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கு இரண்டு எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டர்கள் வெற்றிகரமாக 34 பேரை விமானம் மூலம் மீட்டுச் சென்றன. மீட்கப்பட்டவர்களில் ஏழு ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 27 சுற்றுலாப் பயணிகள் அடங்குவர். இதில் காயமடைந்தவர்கள் சிலரும் விமானத்தில் இருந்தனர். தற்போது அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் டீஸ்டா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாட்டனில் உள்ள ராணுவ முகாமில் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், ஆறு வீரர்கள் காணாமல் போயினர்.
காணாமல் போன ஆறு ராணுவ வீரர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. செயற்கைக்கோள் தொலைபேசிகள் மற்றும் அத்தியாவசிய நிவாரண உபகரணங்களுடன் 23 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சாட்டனில் களமிறங்கியுள்ளனர். நிலச்சரிவால் சாலைகள் கடுமையாக சேதமடைந்ததால், மாற்று போக்குவரத்துப் பாதைகளை தேசிய பேரிடர் மீட்புப் படை கண்டறிய தொடங்கியுள்ளது.
ராணுவத்தின் 112வது படைப்பிரிவு லாச்சென் மற்றும் சாட்டன் இடையே ஒரு முக்கியமான நடைபாதையை நிறுவியுள்ளது. இது தற்போது சாலை வழியாக அணுக முடியாத பகுதிகளில் படிப்படியாக தரைவழி போக்குவரத்தை சாத்தியமாக்குகிறது.
லாச்செனில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நடைபாதை வழியாக சாட்டனுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் வானிலை நிலையைப் பொறுத்து விமானம் மூலம் அனுப்பப்படும் திட்டத்தை மாநில அரசு முன்னெடுத்துள்ளது. இருப்பினும், சாட்டனில் பெய்யும் கனமழை மற்றும் தொடரும் மோசமான வானிலை, ஹெலிகாப்டர் இயக்கத்துக்கு சவாலாக உள்ளது. இதற்கிடையில், மாநில அரசு அதிகாரப்பூர்வமாக இந்த கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஒரு இயற்கை பேரிடராக அறிவித்துள்ளது.