புதுடெல்லி: “கடந்த சில வாரங்களாக நாட்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பெரும் அழிவு ஏற்பட்டதை நாம் பார்த்தோம். இத்தகைய இயற்கைப் பேரிடர்கள் ஒவ்வொரு இந்தியரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளன” என்று பிரதமர் மோடி தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இதன் 125-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இந்த மழைக்காலத்தில், இயற்கைப் பேரிடர்கள் நாட்டைச் சோதிக்கின்றன. கடந்த சில வாரங்களாக நாட்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பெரும் அழிவை நாம் கண்டோம். வீடுகள் இடிந்து, வயல்கள் நீரில் மூழ்கி, முழு குடும்பங்களும் அழிந்த சம்பவங்களும் நடந்தன.
இடைவிடாத வெள்ளப் பெருக்கால் பாலங்கள் – சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. மக்களின் உயிர்கள் ஆபத்தில் இருந்தன. இந்த சம்பவங்கள் ஒவ்வொரு இந்தியருக்கும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களின் வலியை நாம் அனைவரும் பகிர்ந்து கொள்கிறோம்.
எங்கெல்லாம் நெருக்கடி ஏற்பட்டதோ, அங்கெல்லாம் நமது தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் பாதுகாப்புப் படையினர் மக்களைக் காப்பாற்ற இரவு பகலாக உழைத்தனர். வெப் கேமராக்கள், நேரடி கண்டுபிடிப்பாளர்கள், மோப்ப நாய்கள் மற்றும் ட்ரோன் கண்காணிப்பு ஆகியவற்றின் உதவியுடன் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பேரிடர்களின் போது, ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன, காயமடைந்தவர்கள் விமானத்தில் ஏற்றிச் செல்லப்பட்டனர். பேரிடர் காலங்களில் உதவ ஆயுதப்படைகள் முன்வந்தன. உள்ளூர் மக்கள், சமூக சேவையாளர்கள், மருத்துவர்கள், அரசு நிர்வாகம் ஆகியவை இந்த நெருக்கடியான நேரத்தில் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டன. இந்த கடினமான காலங்களில் மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளித்த ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் மனமார்ந்த நன்றி கூறுகிறேன்” என்று கூறினார்.
இந்த ஆண்டு பருவமழை தொடங்கியதிலிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 26 அன்று, ஜம்மு-காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது, இதில் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர். இமாச்சலப் பிரதேசத்தில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நிலவரப்படி, நிலச்சரிவு, திடீர் வெள்ளம் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக உள்ளது.