புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரில் வாடகை வீட்டில் போலி தூதரகத்தை நடத்தி மோசடியில் ஈடுபட்ட ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெஸ்டார்டிகா, சபோர்கா, பவுல்வியா, லோடோனியா என இல்லாத நாடுகளின் தூதராக தன்னைக் காட்டிக்கொண்டு கடந்த 7 ஆண்டுகளாக இந்த போலி தூதரகத்தை காசியாபாத்தைச் சேர்ந்த ஹர்ஷ்வர்தன் ஜெயின் நடத்தி வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு உலக தலைவர்களுடன் தான் இருப்பது போன்று போலி புகைப்படங்களை உருவாக்கி பலரையும் நம்ப வைத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் சிறப்பு அதிரடிப் படை போலீசார் இவரை நேற்று (ஜூலை 22) கைது செய்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேச சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் அமிதாப் யாஷ், “ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்ற நபர் இல்லாத நாடுகளின் பெயர்களில் தன்னை ஒரு தூதர் என காட்டிக்கொண்டு ஏமாற்றி வந்துள்ளார். காசியாபாத்தின் கவி நகரில் உள்ள வாடகை வீட்டில் இவர் போலி தூதரகத்தை நடத்தி வந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது அலுவலகத்தில் இருந்து பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களின் 34 போலி முத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வெளிநாட்டு தூதர்கள் தங்களின் வாகனங்களில் பயன்படுத்தும் ராஜ்ஜிய எண் தகடுகளை இவர் தனது வாகனங்களில் பயன்படுத்தி உள்ளார். நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு, வெளிநாடுகளில் பணி ஒப்பந்தங்களை பெற்றுத் தருவதற்கான தரகுவேலையைப் பார்ப்பது, ஹவாலா மோசடியில் ஈடுபடுவது ஆகிய நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவருக்கு சந்திராசாமி, சர்வதேச ஆயுத வியாபாரி அட்னான் ககோஷி ஆகியோருடன் தொடர்ந்து இருப்பது தெரியவந்தது. அவரது அலுவலகத்தில் இருந்து ரூ.44 லட்சத்துக்கும் அதிகமான பணம், வெளிநாட்டு நாணயங்கள், சிறிய 12 நாடுகளின் ராஜ்ஜிய பாஸ்போர்ட்டுகள், இரண்டு போலி பிரஸ் கார்டுகள், பான் கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வெளியுறவு அமைச்சக முத்திரையடன் கூடிய போலி ஆவணங்கள், பல்வேறு நிறுவனங்களின் ஆவணங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ராஜ்ஜிய எண்களைக் கொண்ட 4 சொகுசு வாகனங்கள், ராஜ்ஜிய எண்களைக் கொண்ட 12 எண் தகடுகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.