புதுடெல்லி: சபாநாயகர் பதவியின் கண்ணியத்தை அதிகரிக்க சபாநாயகர்கள் பாடுபட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இந்த இரண்டு நாள் மாநாட்டை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார். விழாவில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சபாநாயகர்கள், மேல்சபை தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
இந்தியாவின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய சட்டமன்ற சபாநாயகர் விட்டல்பாய் படேலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, “நாட்டின் சட்டமன்ற வரலாறு தொடங்கிய நாள் இன்று. அது தொடங்கிய அதே சபையில் தற்போது நாம் இருக்கிறோம். நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய விட்டல்பாய் படேல், இந்த நாளில்தான் மத்திய சட்டமன்றத்தின் சபாநாயகரானார். இன்று இந்த அவையில் நாட்டின் அனைத்து சபாநாயகர்களும் மேலவை தலைவர்களும் கூடி உள்ளனர். ஒரு பொன்னான வரலாற்றை உருவாக்கிய மற்றும் ஒரு பொன்னான எதிர்காலத்தை நோக்கிச் செயல்படும் முழு சட்டமன்ற அமைப்பும் இன்று இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அவையில் உள்ளது.
சபாநாயகர் பதவியின் மரியாதை மற்றும் கண்ணியத்தை அதிகரிக்க நாம் அனைவரும் பாடுபடுவதற்கான ஒரு வாய்ப்பு இது. நாட்டு மக்களின் பிரச்சினைகளை எழுப்ப ஒரு பாரபட்சமற்ற தளத்தை வழங்க நாம் பாடுபட வேண்டும். அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒரு பாரபட்சமற்ற வாதங்களை முன்வைக்க வேண்டும்.
அவையின் செயல்பாடுகள் அந்தந்த அவையின் விதிகள் மற்றும் சட்டப்படி மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நமது 13,000 ஆண்டுகால வரலாற்றில் சட்டமன்றங்கள் தமது கண்ணியத்தை இழந்த போதெல்லாம், நாம் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருந்தது.” என தெரிவித்தார்.