பஸ்தர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தீவிர நக்சல் வேட்டையை தொடர்ந்து, 5 மாவட்டங்களில் நேற்று 66 நக்சலைட்கள் பாதுகாப்பு படையினர் முன்னிலையில் சரணடைந்தனர். இவர்களில் 49 பேர் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2.27 கோடி பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நக்சல் வேட்டைக்கு என மத்திய ஆயுதப்படை மற்றும் மாநில போலீஸில் சிறப்பு படைகள் உருவாக்கப்பட்டன. இவர்களுடன் துணை ராணுவப்படையினரும், விமானப்படை ஹெலிகாப்டர் உதவியுடன் தீவிர தேடுல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு படையினரின் நடமாட்டத்தை கண்காணிக்க நக்சலைட்கள் ட்ரோன்களையும் பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து அவர்களுக்கு ட்ரோன்கள் விநியோகித்து பயிற்சி அளித்த நபர்களும் கைது செய்யப்பட்டனர். பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையால், நக்சல் அமைப்பின் முக்கிய தலைவர்கள் எல்லாம் தேடுல் வேட்டையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் இதர நக்சலைட்கள் பாதுகாப்பு படையினர் முன்னிலையில் சரணடைந்து வருகின்றனர்.
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் 25 நக்சலைட்களும், தண்டேவாடா மாவட்டத்தில் 15 நக்சலைட்களும், கன்கெர் மாவட்டத்தில் 13 பேரும், நாராயண்பூர் மாவட்டத்தில் 8 பேரும், சுக்மா மாவட்டத்தில் 5 பேரும் பாதுகாப்பு படையினர் முன் நேற்று சரணடைந்தனர். இவர்களில் 27 பேர் பெண்கள் ஆவர்.
பிஜப்பூரில் சரணடைந்த 25 நக்சலைட்களில் 23 பேரின் தலைக்கு மொத்தம் ரூ.1.15 கோடி பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களில் ஒடிசா மாநில குழு தலைவர் ரமணா இர்பாவின் தலைக்கு ரூ.25 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
இவரது மனைவி ரமே கல்மு பற்றி தகவல் அளிப்பவருக்கு ரூ.8 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. நக்சலைட் அமைப்பில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் பலருக்கு ரூ.8 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்கள் அனைவரும் தற்போது தாங்களாகவே சரணடைந்துள்ளதாக சத்தீஸ்கர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ரூ.50,000 உதவித் தொகை: இவர்களுக்கு மாநில அரசின் நக்சலைட் மறுவாழ்வு உதவி திட்டத்தின் கீழ் தலா ரூ.50,000 உதவித் தொகை வழங்கப்பட்டது. நக்சலைட்களின் மறுவாழ்வுக்காக சத்தீஸ்கர் அரசு ‘உங்கள் நல்ல கிராமம்’ என்ற திட்டத்தை தொடங்கி, தொலைதூர கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளை செய்து வருகிறது. இத்திட்டமும், பஸ்தர் போலீஸார் தொடங்கியுள்ள மறுவாழ்வு திட்டமும் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக சரணடைந்தநக்சலைட்கள் தெரிவித்து உள்ளனர்.