சுக்மா: சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த வாரம் முழுவதும் கன மழை பெய்தது. இதனால் தந்தேவாடா, சுக்மா, பிஜாப்பூர் மற்றும் பஸ்தர் மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக சத்தீஸ்கரின் சபரி மற்றும் இந்திராவதி நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் சுக்மா மாவட்டத்தின் ஜக்தல்பூர் பகுதியில் சபரி ஆற்று வெள்ளத்தில் ஒருவர் நேற்று முன்தினம் தத்தளித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்பதற்கு விமானப்படை ஹெலிகாப்டர் உதவி நாடப்பட்டது.
இதையடுத்து அங்கு எம்-17வி5 ரக ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்து வின்ச் மூலம் கீழே சென்ற விமானப்படை கமாண்டோ வீரர், வெள்ளத்தில் தத்தளித்த நபருக்கு மிதவை ஜாக்கெட் அணிவித்து, அவரை வின்ச் மூலம் பாதுகாப்பாக ஹெலிகாப்டரில் ஏற்றினார். சீறிப் பாயும் வெள்ளத்துக்கு மேலே ஹெலிகாப்டர் பறந்த நிலையில் நின்றபடி, இந்த மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது.