பனாஜி: வயதான பெண்ணுக்கு உரிய சிகிச்சை வழங்காத அரசு மருத்துவரை கோவா சுகாதார அமைச்சர் கோபமாக திட்டியதுடன் அவரை உடனடியாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்தும் உத்தரவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானதையடுத்து, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என நேற்று உறுதி அளித்தார்.
கோவா சுகாதார துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே. இவர் கடந்த சனிக்கிழமையன்று கோவா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். அப்போது வயதான பெண் ஒருவருக்கு ஊசிபோட மருத்த புகாரில் தலைமை மருத்துவ அதிகாரி ருத்ரேஷ் குட்டிகரை அழைத்து கடுமையாக எச்சரித்ததுடன் உடனடியாக பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கோவா அமைச்சரின் இந்த செயலுக்கு கோவாவில் உள்ள இந்திய மருத்துவர் (ஐஎம்ஏ) சங்க கிளையும் கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன், இது மருத்துவர் மீது நடத்தப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான தாக்குதல் என்றும் அவரின் பணிநீக்கத்தை உடனே ரத்து செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஐஎம்ஏ வலியுறுத்தியது.
இதைத் தொடர்ந்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ கோவா மருத்துவக் கல்லூரியில் நடந்த பிரச்சினையை நான் மறுபரிசீலனை செய்து, சுகாதார அமைச்சருடன் கலந்து பேசினேன். மருத்துவர் ருத்ரேஷ் குட்டிகர் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார் என்பதை கோவா மக்களுக்கு இதன்மூலம் உறுதியளிக்க விரும்புகிறேன்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக உயர்ந்த தரமான சுகாதாரப் பராமரிப்பை உறுதி செய்வதில் மாநில அரசும் அதன் அர்ப்பணிப்புள்ள மருத்துவக் குழுவும் முழுமையாக உறுதிபூண்டுள்ளது. உயிர்களைக் காப்பாற்றும் எங்கள் மருத்துவர்களின் அயராத முயற்சிகள் மற்றும் விலைமதிப்பற்ற சேவையை நாங்கள் பாராட்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.