புதுடெல்லி: உ.பி.யின் ஆக்ரா அருகிலுள்ள பதேபூர் நகரின் அபுநகரில் ரெடியா எனும் பகுதி உள்ளது. இங்கு மிகவும் பழமையான முஸ்லிம்களின் தர்கா உள்ளது. முகலாயர் ஆட்சிக்கால இந்த கட்டிடத்தின் உள்ளே நவாப் அப்துஸ் சமது என்பவரின் புனித சமாதி உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை தோறும் முஸ்லிம்கள் வந்து வணங்கிச் செல்வது வழக்கம். இந்த இடம், உ.பி. அரசின் நிலப் பதிவுகளில் கஸ்ரா எண் 753-ன் கீழ் மக்பரா மங்கி (தேசிய சொத்து) என்று அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட கல்லறையாக உள்ளது.
இந்நிலையில் பாஜக, பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர், ‘‘இந்த தர்கா, ஒரு சிவன் கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த இடம் இந்துக்களுக்கு சொந்தமானது. இதனுள் இருக்கும் கட்டமைப்புக்குள் தாமரை மலர் மற்றும் திரிசூலம் இருப்பதே கோயிலுக்கான ஆதாரங்கள்’’ என்று சர்ச்சையை கிளப்பினர். மேலும் இந்துத்துவா அமைப்புகளின் திரளான தொண்டர்கள் நேற்று பாதுகாப்புக்கு இருந்த போலீஸாரை மீறி தர்காவில் புகுந்து சேதப்படுத்தினர். இதையடுத்து போலீஸார் அனைவரையும் அங்கிருந்து விரட்டி அமைதியை ஏற்படுத்தினர்.
இதுகுறித்து பதேபூர் மாவட்ட பஜ்ரங்தளம் இணை ஒருங்கிணைப்பாளர் தர்மேந்திரசிங் கூறும்போது, ‘‘இந்த இடத்தில் ஒரு காலத்தில் கோயில் இருந்ததை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்துக்கள் இங்கு வழிபடுவதைத் தடுத்தால், அதன் விளைவுகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்யிருக்கும்’’ என்றார்.
தேசிய உலமா கவுன்சில் தேசிய செயலாளர் மவுலானா நசீம் கூறும்போது, ‘‘இது, வரலாற்றையும் சமூக நல்லிணக்கத்தையும் சிதைக்கும் முயற்சி. இது, பல நூற்றாண்டுகள் பழமையான கல்லறை என்று அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்துத்துவா அமைப்பினரின் சட்டவிரோத நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தாவிடில் உலமா கவுன்சில் போராட்டங்களைத் தொடங்கும்’’ என்றார்.