காக்கிநாடா: கோதாவரி நதியில் குளிக்க சென்ற 8 பேர் மூழ்கி உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம், காக்கிநாடா அருகே உள்ள கே. கங்கவரம் மண்டலம், ஷெரிலங்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கடந்த செவ்வாய் கிழமை பலர் கலந்து கொண்டனர்.
மதிய உணவுக்கு பின்னர், இதில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த காக்கிநாடா, மந்தவேடு, போலாவரம் பகுதிகளை சேர்ந்த 14 முதல் 20 வயதுக்குட்பட்ட 11 இளைஞர்கள் அதே பகுதியில் உள்ள கவுதமி கோதாவரி ஆற்றில் நீச்சல் பழக சென்றனர்.
11 பேர் ஆற்றில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், மற்றவர்கள் அந்த இளைஞனை காப்பாற்ற பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
இதுபோல் 8 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டனர். மீதமுள்ள 3 பேர் கரைக்கு பத்திரமாகத் திரும்பினர். இவர்கள் கொடுத்த தகவலின் படி, போலீஸார், பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர், பெற்றோர், உறவினர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர்.
ஆற்றில் இறங்கிய தீயணைப்புப் படையினர் 7 பேரை சடலமாக மீட்டனர். ஆனால், காக்கிநாடாவை சேர்ந்த கிராந்தி மானியுவல் (19) என்பவரது உடல் மட்டும் கிடைக்க வில்லை. இதையடுத்து நேற்று அதிகாலை முதல் மீண்டும் தேடத் தொடங்கினர். அப்போது அவரது உடலும் கிடைத்தது.
அனைத்து சடலங்களும் மாமிடிவரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சடலங்களை பார்த்து பெற்றோர் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.