லக்னோ: கொல்லப்பட்டதாக கருதப்பட்ட நபர் உயிருடன் திரும்பியதால் கொலை வழக்கில் கைதானவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2022 டிசம்பரில் டெல்லி – அயோத்தி ரயிலின் டி2 பொதுப் பெட்டியில் ஏற்பட்ட தகராறில் பிஹாரை சேர்ந்த எடாப் என்பவர் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டார். அப்போது தண்டவாளத்துக்கு அருகில் கிடந்த ஒரு உடலை எடாப் என்று அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டினர். இதனால் அவரை ரயிலில் இருந்து தள்ளிய உ.பி.யின் அயோத்தி மாவட்டத்தை சேர்ந்த நரேந்திர துபேவை போலீஸார் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட எடாப், பிஹாரில் தனது உறவினர்களுடன் இருக்கும் வீடியோ அண்மையில் வெளியானது. எடாப் கடந்த புதன்கிழமை ஷாஜகான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து அவரை கொன்றதாக கைது செய்யப்பட்ட நரேந்திர துபேவை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் கூடுதல் மாவட்ட நீதிபதி பங்கஜ் குமார் ஸ்ரீவஸ்தவா விடுவித்தார். மேலும் சிறையில் இருந்து விடுதலை செய்ய உத்தரவிட்டார்.