கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் விமானப் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் சாந்தா பால். பகுதி நேரமாக மாடலிங் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் போலி ஆவணங்களை பயன்படுத்தி இந்தியாவில் வசித்து வந்ததாக இவரை கடந்த செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சாந்தா பால், கடந்த 2016-ல் ஆண்டு இந்தியா – வங்கதேசம் இடையிலான அழகிப் போட்டியல் வங்கதேசம் சார்பில் பங்கேற்றார். 2019-ல் இவர் ஆசிய அழகிப் போட்டியிலும் பங்கேற்றுள்ளார். மாடலிங் துறையில் வெற்றியை தொடர்ந்து, அவர் நடிப்புத் தொழிலுக்கு மாறினார். இறுதியில் வங்கதேச விமான நிறுவனம் ஒன்றில் சேர்ந்தார். இவர், கடந்த 2023-ல் வங்கதேசத்தின் பாரிசாலில் இருந்து அந்நாட்டு பாஸ்போர்ட் மூலம் இந்தியா வந்தார். கொல்கத்தாவில் ஒரு சொத்து முகவர் மூலம் அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்தார்.
முஸ்லிம் இளைஞனை திருமணம் செய்தது பெற்றோருக்கு பிடிக்காததால் பிரிந்து வாழ்வதாக குடியிருப்பு உரிமையாளரிடம் கூறியுள்ளார். வாடகை ஒப்பந்தத்துக்காக ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற போலி இந்திய ஆவணங்களை கொடுத்து உள்ளார்.
மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அவரது திருமண சான்றிதழின்படி ஆந்திராவை சேர்ந்த ஷேக் முகமது அஷ்ரப் என்பவரை இவர் திருமணம் செய்துள்ளார். அஷ்ரப் வர்த்தக கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் பிறகு கோல்ஃப் கார்டன் பகுதிக்கு இடம்பெயர்ந்து ஒன்றாக வாழத் தொடங்கினர்.
சாந்தா பால், உள்ளூர் முகவர் ஒருவர் உதவியுடன் ரேஷன் கார்டு,ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட இந்திய அடையாள ஆவணங்களை அவர் போலியாக உருவாக்கியுள்ளார். அவரை வரும் 8-ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.