கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா நகரம் மற்றும் அதனையொட்டி உள்ள சுற்றுப்புற பகுதிகளில் மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.
நள்ளிரவில் பெய்த மழை காரணமாக மக்கள் அதிகம் வசிக்கும் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு நீர் சூழ்ந்துள்ளது. மேலும், சாலையில் தேங்கிய மழைநீர் காரணமாக போக்குவரத்து முடங்கி உள்ளது. மெட்ரோ சேவையும் அங்கு பாதிப்படைந்துள்ளதாக தகவல்.
வங்கக் கடலில் வடகிழக்கு பகுதியில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள மாவட்டங்களில் மழைப்பொழிவு தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மழை: மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு பகுதியில் கடந்த 24 மணி நேரம் பெய்த மழையால் ஒருவர் உயிரிழந்தார். வெள்ளம் ஏற்பட்ட காரணத்தால் 14 பேர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணியை அரசு மேற்கொண்டது. ஒடிசா மாநிலத்தில் வரும் 28-ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.