புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரைக்கும் வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுவர். இதன் பரிந்துரைப்படியே உயர்நீதிமன்ற நீதிபதிகளும் மாற்றம் செய்யப்படுகின்றனர்.
இந்த பட்டியலில் மத்திய அரசு சிலரது பெயர்களை மட்டுமே தேர்வு செய்கிறது. மற்றவர்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுவதில்லை. கடந்த 2019, 2020, 2022-ம் ஆண்டில் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட சில நீதிபதிகளின் பெயர்களுக்கு தற்போது வரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் தாதர், பிரசாந்த் பூஷன் ஆகியோர் 2 வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இதை மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். காவை மற்றும் நீதபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கறிஞர் அரவிந்த் தாதர் வாதிடுகையில் கூறியதாவது: கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து கொலீஜியம் பரிந்துரைந்த நபர்களுக்கு தற்போது வரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் முடிவு எடுக்க ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயம் செய்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு தாமதம் செய்வதை பரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் பணி மூப்பு இழப்பு ஏற்படுவதால், டெல்லி, மும்பையில் இருந்து பரிந்துரை செய்யப்பட்ட பல வழக்கறிஞர்கள் ஆர்வம் இழந்து தங்கள் பெயரை நீதிபதிகள் பரிந்துரை பட்டியலில் இருந்து திரும்ப பெற்றுக் கொள்கின்றனர்.
இந்த தாமதம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2023-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணை பட்டியலில் இருந்து திடீரென நீக்கப்பட்டன. இது குறித்து சில வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியபோது, கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி பதில் அளித்த அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ‘‘சில விஷயங்களை பற்றி எதுவும் கூறாமல் அப்படியே விட்டுவிடுவதுதான் சிறந்தது’’ என கருத்து தெரிவித்தார்.
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதிடுகையில், ‘‘டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் வழக்கறிஞர் தேசிய சட்ட பள்ளியில் முதல் ரேங்க் பெற்றவர். அவரது பெயர் நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. நீதிபதிகள் நியமனம் விஷயம் மத்திய அரசு தாமதம் செய்வது தொடர்ந்து நடைபெறுகிறது’’ என்றார். இதையடுத்து இந்த மனுக்களை விசாரிப்பதாக நீதிபதிகள் ஒப்புக் கொண்டனர்.