சென்னை: மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் ஆகியோருக்கு காவல்துறை சம்மன் விடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ ‘தி வயர்’ ஊடகத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் ஆகியோருக்கு சம்மன் விடுத்துள்ள அசாம் மாநிலக் காவல்துறையின் நடவடிக்கைக்கு எனது வன்மையான கண்டனங்கள்.
இதுதொடர்பான மற்றொரு வழக்கில் சில நாட்களுக்கு முன்புதான், உச்ச நீதிமன்றம் கைது நடவடிக்கைக்குத் தடை விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த அழைப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளன.
அதுவும் முதல் தகவல் அறிக்கையின் படியையோ, வழக்கின் விவரங்களையோ வழங்காமல், வெறுமனே கைது மிரட்டல் மட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட தேசதுரோகப் பிரிவுக்கு மாற்றாகவே பிஎன்எஸ் பிரிவு 152 சுதந்திரமான பத்திரிகைத் துறையைக் கட்டுப்படுத்தத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. கேள்வி கேட்பதே தேசதுரோகமாகக் கருதப்பட்டால் மக்களாட்சி பிழைக்கமுடியாது” எனத் தெரிவித்துள்ளார்.