திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் (101) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். பின்தங்கிய மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவரும் கேரள அரசியலில் முக்கிய இடத்தை வகித்தவருமான வி.எஸ்.அச்சுதானந்தன், கடந்த 2019-ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து பொது வாழ்க்கையில் இருந்து விலகினார்.
கடந்த 2021 ஜனவரியில் நிர்வாக சீர்திருத்த குழு தலைவர் பதவியில் இருந்து விலகினார். திருவனந்தபுரத்தில் உள்ள தனது மகன், மகள் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 23-ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கிசிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு அவர் காலமானதாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் பொதுமக் களின் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் சொந்த ஊரான ஆலப்புழாவுக்கு இன்று எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு இறுதிச் சடங்குகள் நாளை புதன்கிழமை அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.
1940-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்ந்த வி.எஸ்.அச்சுதானந்தன், தனது அரசியல் வாழ்க்கையில் ஐந்தரை ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். 1957-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலக உறுப்பினரானார். 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தலைவர்களில் இவரும் ஒருவர்.
2006-ல் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியை (எல்டிஎப்) வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று 2011 வரை கேரள முதல்வராக பணியாற்றினார். 2011 தேர்தலில் எல்டிஎப் பிரச்சாரத்தை வடிவமைத்து கூட்டணியை வழிநடத்தினார். இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை குறைந்த வித்தியாசத்தில் இழந்தார்.