திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள பார்த்தசாரதி கோயிலின் பிரகாரத்தில் ஆஎஸ்எஸ் கொடியுடன் ஆபரே ஷன் சிந்தூர் பெயரில் மலர் கம்பளம் உருவாக்கிய அக்கட்சி தொண்டர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “இந்த பகுதியில் கம்யூனிஸ்ட் (சிபிஐஎம்) கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்கெனவே பல்வேறு மோதல்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, அவர்களிடம் இந்த பதற்றம் நிறைந்த பகுதியில் கொடியோ அல்லது வேறு ஏதும் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் மலர் அலங்கரிப்புகளோ வைக்கக்கூடாது என்று ஏற்கெனவே அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை மீறி பாஜகவினர் இந்த மலர் கம்பளத்தை உருவாக்கியுள்ளனர்.
இதன் காரணமாக, இருதரப்பினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக கூறி ஆர்எஸ்எஸ் தொண்டர்களுடன் சேர்த்து மேலும் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.
எப்ஐஆரை திரும்பப் பெறுக: ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீது போடப்பட்ட எப்ஐஆரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது: இது கேரளா. இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை கொள்கிறோம். எனவே, ஆபரஷன் சிந்தூர் பெயரில் மலர் கம்பளம் உருவாக்கியதற்காக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதை ஏற்க முடியாது.
26 அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அது நமது ராணுவத்தின் வீரம் மற்றும் வலிமையின் அடையாளம். அதனை அவமதிக்கும வகையில் கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்