புதுடெல்லி: துணைவேந்தர் நியமனங்கள் தொடர்பாக மாநில அரசின் அதிகாரத்தை உறுதிசெய்யும் கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தொடர்ந்த வழக்கும், அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு தற்காலிக துணைவேந்தரை கேரள ஆளுநர் நியமித்ததை எதிர்த்து கேரள அரசு தொடர்ந்த வழக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.
ஆளுநர், கேரள அரசின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், யுஜிசி விதிமுறைப்படி துணைவேந்தரை தேடும் குழு வில் மூன்று அல்லது ஐந்து பேர் இடம்பெறுவார்கள் என்று உள்ளது. ஆனால், எந்த விதியில் ஆளுநர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது? என்று மத்திய அரசு வழக்கறிஞரிடம் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு கூறுகையில், “ஆளுநர்-மாநில அரசு இடையேயான பிரச்சினைகளுக்கு மத்தியில் கேரள துணைவேந்தர் நியமனங்களுக்கான தேடல் குழுவை உச்ச நீதிமன்றம் அமைக்கும். இரு தரப்பினரும் தலா 4 பெயர்களை முன்மொழிய வேண்டும். மாநில அரசும், ஆளுநரும் பரிந்துரைக்கப்படும் பெயர்களின் பட்டியலை வழங்கிய பிறகு, இந்த வழக்கு நாளை (ஆக.14)
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’’ என்று தெரிவித்தது.