திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரண்டு எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யுமாறு அஜித் பவார் தலைமையிலான என்சிபி-யின் தேசிய செயல் தலைவர் பிரபுல் படேல் கடிதம் அனுப்பியுள்ளார்.
கேரள மாநில வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் மற்றும் கேரள மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் தாமஸ் கே.தாமஸ் ஆகிய இரண்டு என்சிபி எம்எல்ஏக்கள் தற்போது சரத் பவார் தலைமையிலான கட்சியில் செயல்பட்டு வருகின்றனர். இந்தக் கட்சி இப்போது கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியில் அங்கம் வகித்து வருகிறது.
இந்த நிலையில், அஜித் பவார் தலைமையிலான என்சிபியின் தேசிய செயல் தலைவர் பிரபுல் படேல், தாமஸுக்கு எழுதிய கடிதத்தில், கேரளாவில் உள்ள 2 எம்எல்ஏ-க்கள் தங்கள் என்சிபி கட்சியின் ‘கடிகாரம்’ சின்னத்தில் போட்டியிட்டு 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இப்போது கட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால், தாமஸ் கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் ஒரு வாரத்திற்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் விதிகளைப் பயன்படுத்தி அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்ற கடிதம் வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரனுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தாமஸ், “கேரள மாநில என்சிபி சரத் பவாரையே ஆரம்பத்தில் இருந்து தலைவராக கொண்டு செயல்பட்டு வருகிறது. பிரபுல் படேலின் கட்சியுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. எனவே அந்தக் கடிதத்தை நாங்கள் பொருட்படுத்தவில்லை” என்று கூறினார்.
இந்தக் கடிதத்துக்கு பதிலளித்த கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன், “படேலின் கடிதம் குறித்து எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் கட்சியின் விதிகளின்படியே செயல்படுகிறோம். கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது என்பது சட்டமன்ற சபாநாயகரால் முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம்” என்றார்.