திருவனந்தபுரம்: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தற்போது 18 பேருக்கு மூளையை தின்னும் அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் கேரளாவில் இதுவரை 41 பேருக்கு இந்த அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, நீர் மூலம் பரவும் நோய்களை எதிர்த்துப் போராடுவதற்காக அரசாங்கம் ‘ஜலமான் ஜீவன்’ எனும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த முயற்சியில் மாநில சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, பொதுக் கல்வித் துறை மற்றும் ஹரித கேரளம் மிஷன் ஆகியவை இணைந்து செயல்படுகிறது.
இந்த பிரச்சாரத்தின் கீழ், கேரளா முழுவதும் உள்ள கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் குளோரினேட் செய்யப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள தண்ணீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படவுள்ளது. அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் உள்ளிட்ட நீர் மூலம் பரவும் நோய்கள் பரவுவதைத் தடுப்பதில் இந்த நடவடிக்கைகள் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கிணறுகள், சுத்தம் செய்யப்படாத தண்ணீர் தொட்டிகள், மாசுபட்ட குளங்கள் மற்றும் ஆறுகளில் இந்த வகை அமீபா இருப்பதை ஆய்வுகள் அடையாளம் கண்டுள்ளன. எனவே, இப்பிரச்சாரத்தின் வெற்றியை உறுதி செய்வதில் உள்ளாட்சி அமைப்புகளின் தீவிர பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.