திருவனந்தபுரம்: கேரளாவில் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் எனப்படும் மூளையை தின்னும் அமீபா நோயால் மூன்று மாதக் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த அமீபா பாதிப்புக்கு ஆகஸ்ட் மாதத்தில் கேரளாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவின் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான மூளைத் தொற்றான அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் எனப்படும் மூளையை தின்னும் அமீபா பாதிப்புக்கு சிகிச்சையில் இருந்த மூன்று மாதக் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், ஆகஸ்ட் மாதத்தில் கேரளாவில் இத்தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஓமசேரியைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்கின் மகனான 3 மாத குழந்தை, ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அக்குழந்தை நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
அதேபோல மலப்புரம் மாவட்டம் கப்பில் பகுதியைச் சேர்ந்த 52 வயது ரம்லாவுக்கு, ஜூலை 8 ஆம் தேதி மூளையை தின்னும் அமீபா பாதிப்புக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டது. அவர் முதலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் உடல்நிலை மோசமடைந்ததால் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக, ஆகஸ்ட் 14 ஆம் தேதி, தாமரச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கோழிக்கோடு மருத்துவமனையில் இதே அமீபா தொற்றால் உயிரிழந்தார்.
சுகாதாரத்துறை அதிகாரிகளின் தகவல்களின்படி, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை சேர்ந்த மேலும் 8 பேர் தற்போது மூளை அமீபா பாதிப்பால் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் எனும் மூளையை தின்னும் அமீபா பாதிப்பு அசுத்தமான நீரில் குளிப்பதன் மூலம் ஏற்படுகிறது. இதுவரை, கேரளா முழுவதும் 42 பேர் இந்த வகை அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் இந்த பாதிப்பு அதிகரித்து வருவதால், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் உள்ள கிணறுகள், நீர்நிலைகள் மற்றும் நீர் சேமிப்பு தொட்டிகளில் குளோரினேஷன் செய்ய சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது. மேலும் இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.