திருவனந்தபுரம்: கடந்த ஆண்டில் கேரளாவின் வயநாடு மாவட்டம் ஒரு பெரிய இயற்கை பேரழிவை சந்தித்தது. நிலச்சரிவு முழு கிராமங்களையும் அடித்துச் சென்றதில் 298 பேர் உயிரிழந்தனர். இவ்வளவு பெரிய பேரழிவுக்கு இயற்கை வளங்களை சூறையாடியதே முக்கிய காரணம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில்தான் மாணவர்களுக்கு காலநிலை நிலைத்தன்மைக்கான பசுமைத் திறன் மேம்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சுற்றுச்சூழல் சேதத்தை தணிப்பதற்கும், காலநிலை நிலைத்தன்மையை அடைவதை நோக்கமாகக் கொண்டும் வயநாட்டில் மாணவர்களுக்கு பசுமைத் திறன் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம், ஆற்றல் மற்றும் கழிவு மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நீடித்த விவசாயம் போன்ற துறைகளில் புதுமையான மாற்றங்களை உருவாக்குவதில் மாணவர்களை தயார்படுத்தும்.
மாணவர்கள் பசுமைத் திறன்களைப் பெறுவது மாவட்டத்தின் நிலையான வளர்ச்சிக்கும் இயற்கை வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்துவதற்கும் கணிசமாக உதவும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.